எரிபொருள் விலை அதிகரிப்பு, போக்குவரத்து கட்டண அதிகரிப்பு சாத்தியம், பாடசாலை போக்குவரத்து கட்டண உயர்வு, ரயில் பொதிகள் சேவை கட்டணம் அதிகரிப்பு போன்ற பல காரணிகள் மாதத்தின் முதல் நாளான இன்று இலங்கையர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது மாத்திரமன்றி சர்வதேச சமூகம் உள்ளிட்ட பலரின் எதிர்ப்புக்கு மத்தியில் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டமும் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.
மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்துக்கு அமைவாக எரிபொருள் விலையானது இன்று திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைத் திருத்தத்துக்கு அமைவாக, ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 05 ரூபாவினால் குறைக்கப்பட்டு 371 ரூபாவாக பதிவாகியுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 08 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 456 ரூபாவாக உயர்ந்துள்ளது.
ஓட்டோ டீசல் 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 363 ரூபாவாகவும், சூப்பர் டீசல் 07 ரூபாவினால் குறைக்கப்பட்டு 468 ரூபாவாகவும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 26 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 262 ரூபாவாக உயர்ந்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைத் திருத்தத்துக்கு அமைவாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் தனது விலையை மாற்றியமைத்துள்ளதுடன், சீனாவின் சினோபெக் எண்ணெய் நிறுவனமும் தனது விலையை நள்ளிரவு முதல் திருத்தி அமைத்துள்ளது.
அதன்படிஇ ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 368 ரூபாவாக உயர்ந்துள்ளது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் விலை 08 ரூபாவினால் குறைக்கப்பட்டு 456 ரூபாவாக திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
ஓட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 360 ரூபாவாக உயர்ந்துள்ளது.
அதேநேரம் சூப்பர் டீசல் ஒரு லீற்றர் 7 ரூபாவினால் குறைக்கப்பட்டு 468 ரூபாவாக திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இன்று (01) முதல் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக மாகாணங்களுக்கிடையிலான பாடசாலை சிறுவர் போக்குவரத்து சேவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டணங்களை 10 வீதம் மற்றும் 15 வீதத்தால் அதிகரிக்க தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
ரயில் பொதிகள் சேவை கட்டணம் அதிகரிப்பு
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இன்று (01) முதல் ரயில் பொதிகள் சேவை கட்டணமும் 80 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 50 ரூபாவாக இருந்த குறைந்தபட்டச கட்டணம் 150 ரூபாவாக உயரும் என்று ரயில்வே பொது மேலாளர் கூறியுள்ளார்.
பஸ் – முச்சக்கர வண்டி கட்டணங்கள்
கடந்த மாதம் எரிபொருள் விலை உயர்வு மற்றும் வற் வரி அதிகரிப்பு போன்ற காரணங்கள் இருந்தாலும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவானது பஸ் கட்டணத்தில் மாற்றம் மேற்கொள்ளவில்லை.
எனினும் முச்சக்கர வண்டிக் கட்டணமானது கடந்த ஜனவரி மாதம் அதிகரிக்கப்பட்டது. முதல் ஒரு கிலோ மீட்டருக்கான கட்டணம் அதிகரிக்கப்படவில்லை எனினும் இரண்டாவது கிலோ மீட்டருக்கான கட்டணம் 80 ரூபாவிலிருந்து 100 ரூபாவாக மாற்றி அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்றைய எரிபொருள் கட்டண உயர்வும் பஸ் மற்றும் முச்சக்கர வண்டி கட்டணத்தில் தாக்கத்தைச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனைய சேவைகள்
பஸ், முச்சக்கர வண்டி மற்றும் பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் மாத்திரமல்லாது ஏற்கனவே அதிகரித்துள்ள மரக்கறி விலைகள் போன்ற ஏனைய பொருட்கள் மீதும் எரிபொருள் கட்டண அதிகரிப்பானது மறைமுகமாக தாக்கத்தை செலுத்தலாம் என எதிர்வுகூறப்படுகிறது.