மாஹோ-அநுராதபுரம் பகுதி நவீனமயமாக்கப்படுவதால் வடக்குப் பாதையில் ரயில் அட்டவணையில் மாற்றம்
மாஹோ-அநுராதபுரம் இடையேயான ரயில் பாதை நவீனமயமாக்கப்படுவதால் வடக்குப் பாதையில் தொடருந்து சேவை அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் அதன் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
மஹோ-அநுராதபுரம் இடையேயான ரயில் பாதை நவீன மயப்படுத்தப்படுவதனால் அந்தப் பகுதி வரும் ஜனவரி 7ஆம் திகதி முதல் 6 மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்படுகின்றது.
இந்த அத்தியாவசிய நவீனமயமாக்கல் முயற்சியானது மிகவும் நம்பகமான மற்றும் மேம்பட்ட தொடருந்து சேவையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பயணிகளுக்கு ஒரு மென்மையான பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை மற்றும் தலைமன்னாருக்குச் செல்லும் பல நேரடி தொடருந்து சேவைகள் அபிவிருத்தி திட்ட காலத்திற்கு ரத்து செய்யப்படும்.
இந்த நான்கு ரயில் சேவைகள் ரத்து செய்யப்படும்.
தொடருந்து எண். 4021/4022 – கொழும்பு – காங்கேசன்துறை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சேவை
தொடருந்து எண். 4017/4018 – உத்தரா தேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சேவை
தொடருந்து எண். 5003/5004 – தலைமன்னார் எக்ஸ்பிரஸ் சேவை
தொடருந்து. 4089/4090 – காங்கேசன்துறை – கொழும்பு இரவு அஞ்சல் சேவை
எனினும் அனுராதபுரத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் தினமும் இரண்டு தொடருந்து சேவைகள் இடம்பெறும்.
அநுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறைக்கு காலை 8:20 மணி ஆரம்பமாகி காங்கேசன்துறையை நண்பகல் 12:23 மணிக்கு வந்தடையும். மற்றொரு தொடருந்து அநுராதபுரத்திலிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பித்து மாலை 6:33 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையும்.
காங்கேசன்துறையிலிருந்து காலை 6 மணிக்கு சேவையை ஆரம்பிக்கும் தொடருந்து அநுராதபுரத்தை முற்பகல் 10:16 மணிக்கு சென்றடையும் மற்றொரு தொடருந்து காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 2:20 மணிக்கு சேவையை ஆரம்பித்து மாலை 6:57 மணிக்கு அநுராதபுரத்தை சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் தேவி தொடருந்து சேவை திருகோணமலை வரை நீடிப்பு
நவீனமயமாக்கல் காலத்தில் ஒரு சோதனை முயற்சியின் ஒரு பகுதியாக, யாழ் தேவி எக்ஸ்பிரஸ் தொடருந்து (எண் 7077/7078) திருகோணமலை வரை சேவையை நீட்டிக்கப்படும் என்றும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது