வவுனியாவில் பெய்து வரும் கன மழை காரணமாக அரச திணைக்களங்கள் பல நீரில் மூழ்கியதுடன் மன்னார் வீதி ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டது.
வவுனியாவில் நேற்று செவ்வாய்க்கிழமை (26) பிற்பகல் தொடக்கம் கடும் மழை பெய்து வரும் நிலையில் வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்களம், தாதியர் கல்லூரி, அரச சுற்றுலா விடுதி, பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், பிரதேச செயலகம் என்பன நீரில் மூழ்கியுள்ளதுடன், காமினி மாகாவித்தியாலயம் முன்பாக வெள்ள நீர் பாய்ந்து ஓடுவதால் வீதி போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
அத்துடன், வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியிலும் வர்த்தக நிலையங்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன், வவுனியாவின் பல பகுதிகளில் வீடுகளும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
இதனையடுத்து, வவுனியா மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், வவுனியா பிரதேச செயலாளர், நகரசபைச் செயலாளர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர், இராணுவத்தினர் மற்றும் பொலிசார் வருகை தந்து குறித்த அரச அலுவலங்கள், திணைக்களங்கள் மற்றும் வீதிகளில் உள்ள வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.