நீர்கொழும்பு முன்னக்கரை கலப்பு பகுதியில் தோணி – படகு மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
இந்த விபத்து நேற்று (24) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
7 பேர் நீரில் மூழ்கிய நிலையில் அவர்களில் 5 பேர் உயிர் தப்பியுள்ளனர்.
50 வயதுடைய தந்தையும் 20 வயதுடைய மகளும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
வெளிநாட்டில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய கத்தோலிக்க மதகுரு உட்பட 7 பேரை ஏற்றிச் சென்ற படகு தடாகத்தில் மற்றுமோர் பெரிய படகுடன் மோதியதில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து அருகில் இருந்த படகுக் குழுவினர் பாதிரியார் உட்பட ஐந்து பேரை மீட்டுள்ளனர். எனினும், படகில் பயணித்த தந்தையும் மகளும் காணாமல் போயுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னக்கரையைச் சேர்ந்த மூன்று ஆண்கள், நான்கு பெண்களுமே இந்த விபத்தினை எதிர்கொண்டவர்கள் ஆவார்.
உயிர் தப்பிய 5 பேரில் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூவர் சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
காணாமல் போன இருவரையும் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.