திருகோணமலை மாவட்டம் மூதூர் பாலத்தடிச்சேனையைச் சேர்ந்த இலக்கியவாதியும் சோதிடருமான மேனாள் மூதூா் வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளரும், கலைப்பட்டதாரியும், இலங்கை அதிபர் சேவை, கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவருமான கலைமாறன் செ.லோகராசாவுக்கு இலக்கிய வித்தகர் விருது, புலமைத்துவ விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
முன்னம் போடிவெட்டையை சேர்ந்த செல்லத்துரை – சிவபாக்கியம் தம்பதியினரின் மூத்தபுதல்வரான இவர் முன்னம் போடிவெட்டை கிளிவெட்டி வித்தியாலயத்தில் கல்விகற்றார். மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் பட்டம் பெற்றார்.
கல்வி கற்கும் காலத்தில் கலைத்துறையிலும், சோதிடத்துறையிலும், சமூக சேவையிலும் ஆர்வமுள்ளவர். அத்துடன் கவிதை, கட்டுரை, நாடகம், சோதிடம் போன்றவற்றிலும் ஈடுபட்டார். இவர் ஆசிரியராகவும், கொத்தணி அதிபராகவும், உதவிக் கல்விப் பணிப்பாளராகவும், கோட்டக் கல்விப்பணிப்பாளராகவும், பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் நாற்பது வருடங்கள் கல்விப் புலத்தில் கடமை புரிந்தவர் ஆவார்.
இலங்கை வானொலி, வெரித்தாஸ் வானொலி, பத்திரிகைகள், சஞ்சிகைகளில் போன்றவற்றில் இவரது கவிதை, கட்டுரை, சோதிடம், இலக்கியம் சம்பந்தமான ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. இவர் பன்னிரெண்டுக்கு மேற்பட்ட பட்டங்களையும் விருதுகளையும் பெற்றறுள்ளார்.
இவர் இதுவரையில் பத்து நூல்களை எழுதி வெளியீடு செய்துள்ளாா். சுமாராக ஐம்பது வருட இலக்கியப் பயணத்தின் மூலமாக இவருக்கு இலக்கிய வித்தகர் விருது, புலமைத்துவ விருது என்பன திருமோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இலக்கிய விழா நிகழ்வில் வழங்கப்படவுள்ளது.
இவர் மூதூர் பிரதேச செயலக சாகித்திய விழாக் குழு செயலாளராகவும் திருகோணமலை மாவட்ட சாகித்திய விழாக் குழு செயலாளராகவும் செயலாற்றி கலை இலக்கியத்துறைக்கு பங்களிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.