எனது உயிரை பாதுகாக்க வடக்கில் இருந்து உடனடியாக இடமாற்றம் செய்ய கோரி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரிடம் உருக்கமான கோரிக்கையை விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இன்றைய தினம் (22) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகராக நான் நியமிக்கப் பட்டதில் இருந்து பல சுகாதார தர மேம்பாடுகள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதன் மூலம் சுகாதார சேவைகளை மேம்படுத்த என்னை அர்ப்பணித்து வந்துள்ளேன்.
எனினும் கடந்த 19 ஆம் திகதி (19) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் துரதிர்ஷ்டவசமான கரு மகப்பேறு மரணம் நிகழ்ந்துள்ளது.
குறித்த தாய் மற்றும் சிசுவின் மரணம் தொடர்பாக உரிய நடவடிக்கையை முன்னெடுத்து வந்தேன்.
எனினும் மகப்பேற்று விடுதியில் புகுந்த கும்பல் பிரசவ அறைக்குள் நுழைந்து மருத்துவமனையின் சொத்துக்களை சேதப்படுத்தியது.
நான் அங்கு சென்ற போது நிலைமை குறித்து விவாதிக்கவும், வருகை தந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் காவல்துறை அதிகாரிகளின் உதவியை நாடினேன்.
எனினும் அவர்கள் என்னை தனிப்பட்ட முறையில் குறி வைத்து சரமாரியாக தாக்க முயன்றனர். அவர்கள் என்னை கொலையாளி என்று கூறி கூச்சலிட்டனர். அவர்களில் சிலர் என்னைத் தாக்க முயன்றனர்.
அதனைத் தொடர்ந்து 20 ஆம் திகதி புதன்கிழமை அன்று மாவட்டச் செயலாளர், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், மத்திய சுகாதார அமைச்சின் பிரதி நிதிகள் மற்றும் மதத் தலைவர்களுடன் மேற்கண்ட மரணம் தொடர்பாக சுகாதார அமைச்சகம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்க மளித்தோம்.
இதற்கிடையில் அன்றைய தினம் மாலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நுழைவாயிலை முற்றுகையிட்டு ஒரு பெரிய கூட்டம் அங்கு அவசர சிகிச்சை பிரிவு மற்றும் வெளி நோயாளர் பிரிவுக்குள் நுழைந்து அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னார் மாவட்ட செயலாளர், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரிடம் என்னை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
நான் எனது குடியிருப்பில் இருந்து 355 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து பயணிப்பதால் இது எனக்கு கடுமையான உயிருக்கு ஆபத்தான எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
எனக்கு எதிரான தனிப்பட்ட முறையில் சமூக ஊடகங்களில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும் எனக்கு எதிரான பிரச்சாரங்கள் பொது கிளர்ச்சி மற்றும் அமைதியின்மையை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவே எனக்கு வட மாகாணத்தில் பாதுகாப்பற்ற பணிச் சூழல் எனக்கு ஏற்பட்டுள்ளது.
தயவு செய்து எனது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தயவு செய்து என்னை அவசரமாக வடக்கு மாகாணத்திற்கு வெளியே மாற்ற நடவடிக்கை எடுக்கவும்.
எனக்கு எதிராக விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் குறித்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளேன்.என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.