தேசிய சமாதான பேரவை சொண்ட் நிறுவனத்துடன் இணைந்து சமூக நல்லுறவு, சகவாழ்வு, நல்லிணக்கம் சமாதானம் ஆகியவற்றோடு இன ஐக்கியத்தை கட்டி எழுப்பும் நோக்கில், யாழ்ப்பாண மாவட்டத்தில் இன, மதங்களுக்கு இடையிலான பதற்ற நிலை தொடர்பான கலந்துரையாடல் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் மாவட்ட சர்வ மத குழு உறுப்பினர்கள், இளைஞர்கள், உள்ளூராட்சி மன்ற பெண் பிரதிநிதிகள், அரச உத்தியோகத்தர்கள், மதகுருமார்கள் , சமூக மட்ட பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் யாழ்ப்பாண மாவட்ட சர்வ மத குழுவின் இணைப்பாளர் செல்வி ஜென்சி விக்டர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து கலந்துரையடலை தேசிய சமாதான பேரவையின் திட்ட உத்தியோகத்தர் முனீப் ரஹ்மான் அவர்கள் வழிநடத்தி இருந்தார்.
இக் கலந்துரையாடலில் சொண்ட் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் செந்துராசா அவர்கள் உரையாற்றுகையில், நாம் இனமத நல்லினத்துக்காக சமூக வலைத்தளங்களில் பிரசுரிக்கும் சாதகமான செய்திகள் கூட ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வித்தாக அமையும் என குறிப்பிட்டு இருந்தார்.
அத்தோடு பல மத தலைவர்களும், யாழ் மாவட்ட சர்வமத குழுவினரும் பங்கு பற்றி திட்டத்தின் நன்மை தீமை தொடர்பான தமது கருத்துக்களை பதிவிட்டு இருந்தனர்.