சீனாவில் உள்ள விளையாட்டு அரங்கம் அருகே நின்று உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தவர்கள் மீது கார் மோதிய சம்பவத்தில் 35 பேர் உயிரிழந்திருப்பதாக பெரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சீனாவின் கவ்ங்டங் மாகாணம் குஹாய் நகரில் விளையாட்டு அரங்கம் உள்ளது. குறித்த விளையாட்டு அரங்கத்திற்கு வெளியே அந்நாட்டு நேரப்படி, நேற்றையதினம் மாலை 7.30 மணியளவில் 70க்கும் மேற்பட்டோர் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தனர்.
அப்போது, அந்த விளையாட்டு அரங்கம் அருகே வேகமாக வந்த கார் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தவர்கள் மீது வேகமாக மோதியுள்ளது. இச் சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 35 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தாகவும், மேலும், 43 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து விரைந்து சென்ற பொலிஸார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிச்சென்ற 62 வயதான பெண்ணை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் தற்போது கோமா நிலையில் உள்ளதாகவும் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சொத்து பங்கீட்டின்போது ஏற்பட்ட திருப்தியின்மை காரணமாக பெண் தனது காரை உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.