இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளினால் வடக்குக் கடலும் மக்களும் பாதிக்கப்படும் நிலையில் அவற்றை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.
நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கடற் பகுதி மக்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் நிலை குறித்து நான் அறியும் நிலையில் தொடர்ச்சியாக எமது கடல் வளத்தையும் மக்களையும் அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது.
நான் ஜனாதிபதியாக வருவேன் என தெற்கில் எதிர்வு கூறப்பட்ட நிலையில் வடக்கில் அவ்வளவு தூரம் நான் வருவேன் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படவில்லை.
எமது நாட்டை ஆட்சி செய்த பல திருட்டு கும்பல்கள் இன்று திருட முடியாமல் அநுரவுக்கு ஆதரவு வழங்கப் போவதாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்.
நாம் ஊழல், திருட்டுக் கும்பல்களை இணைத்துக்கொண்டு பாராளுமன்றத்தில் பயணிக்கப் போவதில்லை பாராளுமன்றத்தை சுத்தப்படுத்தும் செயற்பாட்டை மக்கள் செய்வார்கள்.
ஜனாதிபதி வேட்பாளராக நான் போட்டியிட்ட நிலையில் யாழ் தேர்தல் தொகுதியில் 27 ஆயிரம் வாக்குகளை எனக்கு வழங்கினார்கள் அது எனக்கு கிடைத்த முதல் வெற்றி.
ஏனெனில் கடந்த காலங்களில் நமக்கு வழங்கப்பட்ட வாக்குகளுடன் ஒப்பிடும்போது பாரிய அதிகரிப்பாக ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குகளை நோக்கலாம்.
மக்களை நான் குறை கூறவில்லை ஏனெனில் தமிழ் மக்களை தமிழரசியல் வாதிகள் எப்போதும் தவறான பாதையில் வழி நடத்துபவர்களாக காணப்படுகின்றனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவருக்கும் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ஒருவருக்கும் தமிழ் மக்கள் வாக்குகளை வழங்க வேண்டும் என தமிழரசிகள் வாதிகள் அவர்களுக்காக மேடை ஏறினார்கள்.
இப்போது கூறுகிறார்கள் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம். அவர்கள் தெற்கு கட்சிகள் எங்களுக்கு வாக்களியுங்கள் என மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கிறார்கள்.
ஆகவே எமது புதிய பாராளுமன்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கம் அதற்காக தமிழ் மக்கள் அணி திரள வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.