அருணோதயம், மக்கள் முன்னணி சார்பாக கிளிநொச்சியிலிருந்து போட்டியிடும் வேட்பாளர் பொன் -சுதன் நேற்று(9.11.2024) மாலை கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்தினார்.
இராணுவ புலனாய்வாளர்கள் காணொளிகளை பதிவு செய்துகொண்டிருந்தவேளை வேட்பாளர் பொன்.சுதன் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இங்குதான் ஆயிரக்கணக்கான மாவீரர்களுடைய வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது. அதில் எனது சகோதரரும் ஒருவர். எம்மை பொறுத்தவரை இது துயிலும் இல்லம் ஒரு சிலரை பொறுத்தவரை இது சுடுகாடு. பிணங்கள் குவிக்கப்பட்ட இடத்தில் குடியிருப்பதை நான் இதை விட வேறு எங்கும் கண்டதில்லை.
எங்களுடைய உறவுகள் புதைக்கப்பட்ட இடங்களில் இலங்கை இராணுவம் குடியிருக்கின்றது.அவர்களை பொறுத்தவரை இவர்கள் பயங்கரவாதிகளாக இருக்கலாம் ஆனால் எம்மை பொறுத்தவரை இவர்கள் எமது உறவுகள் அண்ணன், தங்கைகள். இவர்களை அஞ்சலிக்க கூட முடியாத நிலையில் இலங்கை அரசாங்கம் எம்மை வைத்துள்ளது.
இந்த இடத்தில் நின்று கொண்டு இலங்கை ஜனாதிபதி, பெளத்த குருமார்கள், சிங்கள மக்களுக்கு இருகரம் கூப்பி ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன்.
இதை ஒரு சுடுகாடாக நினைத்து எமது சொந்தங்கள் புதைக்கப்பட்ட இடத்தை விடுவிக்க வேண்டும். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதை துயிலும் இல்லமாக நினைக்கா விடினும் ஒரு சுடுகாடாக நினைத்து இதை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இதை விடுவிக்கும் பட்சத்தில் அமைதி, சமாதானம் இதில் இருந்தே ஆரம்பிக்கப்படும். இறந்தவர்களை அஞ்சலி செலுத்தும் உரிமை தமிழ் மக்களுக்கு கிடைக்கும் போது ஒரளவேனும் மனநிறைவாக இந்த நாட்டில் அவர்கள் வாழ முடியுமெனவும் தெரிவித்தார்.