கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பிட்டிய மீகனுவ வீதியில் முச்சக்கரவண்டிக்கு அருகில் வீழ்ந்து கிடந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வெரெல்லகம பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று புதன்கிழமை (06) விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கண்டி வீதியில் மின்கம்பமொன்றுக்கு அருகில் முச்சக்கரவண்டி ஒன்று நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அதன் சாரதி என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் முச்சக்கரவண்டிக்கு அருகில் விழுந்து கிடந்துள்ளார். இந்நிலையில், குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.