மாத்தறை, மிதிகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொவியாபான பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பெண் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
ஹங்கம, வெலிகம மற்றும் வெல்லவாய ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 20 முதல் 42 வயதுடைய ஏழு நபர்களும் ஹங்கம பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடைய பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை, மிதிகம, கொவியாபான பிரதேசத்திற்கு கடந்த செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி அன்று மோட்டார் சைக்கிளில் சென்ற இனங்காணாத நபர்கள் சிலர் மீன் விற்பனை நிலையம் ஒன்றிலிருந்த நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர். இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் ஹங்கம, வெல்லவாய மற்றும் மிதிகம ஆகிய பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரிடமிருந்து 15 இலட்சத்து 42 ஆயிரம் ரூபா பணம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.