தென் பகுதியில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமான எஃப்ரேல் நிறுவனத்துக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் கிளிநொச்சி – தருமபுரத்தில் நடைபெற்றது.
இதில் 13வது சீர்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும், அதனை நிறைவேற்றுவதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது மு.சந்திரகுமார் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,
வடக்கும், கிழக்கும் தெற்கும் இணைந்து ஒரு கருத்தில் மாகாண சபை முறைமை தொடர்பான பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற, இளைஞர்களின் எதிர்பார்ப்பாகவே இந்த சந்திப்பு அமைந்துள்ளது. இந்த 13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமையானது அரசியலமைப்பில் குறிப்பிட்டவாறு முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்.
இது வடக்கு கிழக்கு தமிழர்களின் கோரிக்கையாக மாத்திரம் அல்லாமல் ஒட்டுமொத்தமான இலங்கை தீவிலே, எல்லா மக்களுக்கும் அந்த அதிகாரப் பரவலாக்கலை ஏற்றுக்கொள்ளும் வகையில் தென்னிலங்கையில் இருந்து வந்த இளைஞர்கள் ஆரம்பித்திருக்கும் இந்த முயற்சியை வரவேற்கிறோம். அவர்களுடைய இந்த முயற்சியில் வடக்கு – கிழக்கு இளைஞர்களும் இணைந்துகொள்ள வேண்டும் என்பது எமது விருப்பம் என அவர் மேலும் தெரிவித்தார்.