2024 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு இன்றையதினம் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் குறித்த வாக்களிப்பு தொடர்பாக செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்காக ஊடகவியலாளர் ஒருவர் சங்கானை கல்விக் கோட்டத்தில் அமைக்கப்பெற்றுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்றிருந்தார்.
அங்கு சென்று செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்கு முன்னர் குறித்த ஊடகவியலாளர், வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த வலிகாமம் கல்வி வலயத்தின் கணித பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.புஸ்பகாந்தன் அவர்களிடம் அனுமதி கோரியுள்ளார்.
இதன்போது புஸ்பகாந்தன் அவர்கள், கடந்த ஜனாதிபதி தேர்தலில் தனது புகைப்படத்தை செய்திக்குள் பிரசுரித்து விட்டதாகவும், குறித்த ஊடகவியலாளரை வெளியே செல்லுமாறும், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டால் ஊடக சாதனங்கள் பறித்து வெளியே வீசிவிட்டு விரட்டுவேன் எனவும் அச்சுறுத்தியுள்ளார்.
அதற்கு குறித்த ஊடகவியலாளர், வாக்களிப்பு நிலையத்திற்கு வெளியே நின்று செய்தி சேகரிப்பில் ஈடுபடுவது வழமை, அவ்வாறு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டால் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று வினாவிய போது, செய்தி சேகரிப்பில் ஈடுபடவோ, வாக்களிப்பு நிலையத்திற்கு வெளியே நிற்கவோ கூடாது என்று ஊடகவியலாளரை அச்சுறுத்தியுள்ளார்.
புஷ்பகாந்தன் என்பவர் ஊடக சுதந்திரத்தை நசுக்க முற்படுகின்றார் என குறித்த ஊடகவியலாளர், யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன், வடக்கு மாகாண கல்வி திணைக்கள பணிப்பாளர் திரு.பிரட்லீ, யாழ்ப்பாண மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் திரு.சி.அமல்ராஜ் ஆகியோரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
தேர்தல் காலங்களில் ஊடகங்களின் பணி என்பது இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தல் என்பது அவர்களை சுயாதீனமாக இயங்க அனுமதிக்காமையை எடுத்துக் காட்டுகின்றது என சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.