பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம் 10000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல், வனசீவராசிகள், வனவளங்கள், நீர் வழங்கல் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
அரச பெருந்தோட்ட நிறுவனம், எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் மற்றும் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபையின் கீழ் நிர்வகிக்கப்படும் பெருந்தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இந்த முற்பணம் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முந்தைய வருடங்களில் 10000 ரூபாவாக வழங்கப்பட்ட பண்டிகை முற்பணம் தற்போது 20000 ரூபாவாக வழங்கப்படவுள்ளது.
நாட்டில் காணப்படுகின்ற பொருளாதார நெருக்கடியினால் வாழ்க்கை செலவு மற்றும் தொழிலாளர்களின் கொள்வனவு செய்யும் சக்தி குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றமையினை கவனத்திற் கொண்டே இந்த விசேட பண்டிகைக்கால கொடுப்பனவினை வழங்குவதற்கு தீர்மானித்ததாக சுற்றுச்சூழல், வனஜீவராசிகள், வனவள, பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு வசதி அமைச்சின் செயலாளர் பீ.கே. பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களது விசேட பண்டிகையான தீபாவளி பண்டிகையினை கொண்டாடும் மலைநாட்டு தமிழ் பிரஜைகளை போன்றே முழு நாட்டிலுமுள்ள அனைத்து தமிழ் மக்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.