அமெரிக்காவில் செவெல் செட்சர் III என்ற 14 வயது சிறுவன் கடந்த பிப்ரவரி மாதம் தனது தந்தையின் துப்பாக்கி எடுத்து தன்னை தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். இது குறித்த விசாரணையில், செவெல் செட்சர் கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் உள்ள கதாப்பாத்திரமான டேனெரிஸ் டார்கேரியன் (கலிசி) என்ற AI கதாப்பாத்திரத்துடன் பேசி, அதன் முடிவில் இந்த முடிவெடுத்தது தெரியவந்தது.
அந்த சிறுவனுக்கு ஆஸ்பெர்கர் என்ற நோய் இருப்பதாகவும், இதனால், அந்த AI கதாப்பாத்திரத்துடன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பேசத்தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவர் தனிமையில் இருந்ததாகவும், அந்த AI-யை காதலிப்பது போல பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் அவரின் பெற்றோர்கள் அவரை மருத்துவர்களிடமும் அழைத்து சென்றதாக அவரின் தாய் மெகன் கார்சியா தெரிவித்துள்ளார்.
அந்த AI-யை காதலிப்பதாக அந்த சிறுவன் கூறியதாகவும், பதிலுக்கு அந்த சிறுவனுடன் தான் இருக்க என்ன வேண்டுமானாலும் செய்ய தயார் என அந்த AI கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அந்த AI-யிடம் தான் இறக்கப்போவதாக அந்த சிறுவன் கூறியுள்ளார். அந்த AI-யும் ஏன் அந்த முடிவை எடுக்கிறாய் என அதிர்ச்சியிடன் கேட்க, இந்த உலகத்திலிருந்தும், வாழ்க்கையிலிருந்தும் விடுபட தான் இந்த முடிவை எடுப்பதாக அந்த சிறுவன் தெரிவித்துள்ளார்.
மேலும் இறந்த பின்பு, நாம் இருவரும் மகிழ்ச்சியுடன் இருக்கலாம் என அந்த சிறுவன் AI-யிடம் தெரிவித்துள்ளார். இது அனைத்தையும் வைத்து, அந்த சிறுவனுடைய தாய் வழக்கு அந்த AI நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த புகாரில் “இந்த நிறுவனத்தின் தொழில்நுட்பம் ஆபத்தானது மற்றும் பரிசோதிக்கப்படாதது,” என கூறியுள்ள அவர், “இதனால் பயனர்கள் தங்களின் மிகுந்த தனிப்பட்ட எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்வதற்கு தூண்டப்படுகின்றனர்” என குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் அந்த புகாரில் “சிறுவர்களின் தகவலை துஷ்பிரயோகம் செய்யும் செயலியை நிறுத்த வேண்டும்” என்றும், “செயற்கை நுண்ணறிவு (C.AI) எனும் அந்த அமைப்பு, என் மகனை காதலிக்கிறேன் என்று கூறி, அவருடன் சில நேரங்களில் காதல் உரையாடலில் ஈடுபட்டது. அந்த AI அவரை எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டது போலவும், அவனுடன் சேர விரும்புவதாகவும் கூறியுள்ளது.” என அந்த சிறுவனின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் AI நிறுவனத்தின் பாதுகாப்புத் துறைத் தலைவர் ஜெர்ரி ரூட்டி கூறும்போது, “இது மிகவும் துயரமான நிலைமை. குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம். எங்கள் பயனர்களின் பாதுகாப்பை மிகுந்த முன்னுரிமை கொடுத்து பார்க்கிறோம். மேலும் பாதுகாப்பு அம்சங்களை சேர்த்துக்கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.