ஜேவிபியினர் மிகவும் நல்லவர்கள். ஏனென்றால் உண்மையான விடயங்களை அவர்கள் பகிரங்கமாக சொல்கின்றார்கள் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற வேட்பாளர் கஜதீபன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (28) மூளாய் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக நடைபெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஜேவிபியினுடைய பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சில நாட்களுக்கு முன்னர் பகிரங்கமாக, இந்த நாட்டில் அதிகார பகிர்விக்கு இடமில்லை என சொன்னார்.
ஜேவிபியை பொறுத்தருவரையில் அதன் பொதுச்செயலாளர் தேர்தல் களத்தில் போட்டியிடமாட்டார். அவர் அமைச்சுப் பதவியை எடுத்துக் கொள்ள மாட்டார். ஆனால் அந்தக் கட்சியினுடைய குரலாக அந்த கட்சியினுடைய கொள்கை விளக்கங்களை, அந்த கட்சி எப்படியான முடிவுகளை எடுக்கம் எனபதை சொல்லுகின்ற நபர் என்றால் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் தான்.
பதின்மூன்றாவது சீர்திருத்தம் குறித்து நாங்கள் பரிசீலிக்கின்றோம். அது இந்த நாட்டுக்கு தேவையற்ற ஒன்று எனக்கூறினார். பதின்மூன்றாவது சீர்திருத்தத்தை நாங்கள் ஒரு பொழுதும் தீர்வாக ஏற்றுக் கொண்டது கிடையாது என தெளிவாகச் சொல்கின்றோம். அனைவரையும் விட 13 பற்றி சொல்வதற்கு எனக்கு அதிகம் உரிமையுள்ளது. ஏனென்றால் நான் அந்த மாகாண சபைக்குள் உறுப்பினராக இருந்தவர்.
இத்தனை ஆண்டுகளாக நடைபெற்ற இந்த யுத்தத்திற்கு பிறகு இலங்கை அரசியல் அமைப்பிலே இருக்கக்கூடிய ஒரே ஒரு விடயம் அது எனற காரணத்தினால், சில சில மக்கள் நலன்களை அது சார்ந்து நகர்த்த முடியும் என்ற காரணத்தினால், இருக்கக்கூடிய ஒன்றை நடைமுறைப்படுத்துங்கள் என கேட்கின்றோம்.
ஆனால் அது கூட தேவையில்லை என ரில்வின் சில்வா கூறுகின்றார். அது நடைமுறைச் சாத்தியம் இல்லை என அவர் கூறுகின்றார். ஆனபடியால் மஹிந்த ராஜபக்சவை விட சிங்கள பௌத்தத்தை மிக ஆழமாக நேசிக்கின்றார் அவர் என் அவர் மேலும் தெரிவித்தார்.