வடக்கிற்கான தொடருந்து சேவையை நாளை முதல் வழமைபோல முன்னெடுப்பதற்குத் தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான தொடருந்து நாளை காலை 5:45 இற்கு புறப்படவுள்ளது.
எவ்வாறாயினும், வடக்கு தொடருந்து மார்க்கத்தில் உள்ள சில கடவைகளில் இதுவரை பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படாமையால் மக்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமெனத் தொடருந்து பிரதிப் பொது முகாமையாளர் என். ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
அத்துடன், வடக்கு மார்க்கத்தின் தொடருந்து சேவைகள் நாளை மீள ஆரம்பிக்கப்பட்டாலும் சமிக்ஞைகள் தொடர்பான சிக்கல் நிலை தொடர்வதாகத் தொடருந்து சாரதிகள் சங்கத்தின் தலைவர் சந்தன தெரிவித்துள்ளார். இதனால், வடக்கு தொடருந்து மார்க்கத்தின் கடவைகளைப் பயன்படுத்துவோர் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும் எனத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், மஹவ மற்றும் அநுராதபுரம் ஆகிய தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான தொடருந்து மார்க்கத்தைப் புனரமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.