மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.
இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 – 45 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.
புத்தளம் தொடக்கம் மன்னார்,காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடல் பிராந்தியங்களிலும், ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களிலும் மணித்தியாலத்திற்கு 50 – 55 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.