வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) அவர்களுக்கும் இடையில் இன்று (23/10/2024) வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
வடக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாடுகள், கல்வி, சுற்றுலாத்துறை, காணி விடுவிப்பு, போக்குவரத்து வசதிகள், தொழில் வாய்ப்புகள், முதலீட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.
அமெரிக்க தூதுவர், காணி விடுவிப்பு தொடர்பாக விபரங்களை கௌரவ ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார். தற்போது மேன்மை தங்கிய ஜனாதிபதியின் வழிகாட்டுதல்களுக்கு அமைய காணி விடுவிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன என கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.
ஆளுநர் அவர்கள் வடக்கு மாகாணத்தில் காணி சம்பந்தப்பட்ட பிணக்குகள், சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புகள் பாரியளவில் காணப்படுகின்றன எனவும் அவற்றை தீர்ப்பதற்கு தற்போது உள்ள அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து சாதகமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
ஆளுநர் அவர்கள் வடக்கில் காணப்படும் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிடம் கேட்டுக்கொண்டார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்ததுடன் கௌரவ ஆளுநரிடமிருந்தும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.