கனமழை காரணமாக பெங்களூரில் புதிதாக கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் நேற்று மாலை அடியோடு சரிந்ததில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
10 பேர் மீட்கப்பட்டு பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், 5 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். எஞ்சியோரை மீட்கும் பணி நடந்து வருகிறது.
ஏழு அடுக்குகளைக் கொண்ட அந்த கட்டிடம் சரியும் சிசிடிவி காணொளி காட்சியானது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த பகுதியில் 4 மாடிக் கட்டிடங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாக 7 மாடிகள் வரை கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அஸ்திவாரம் பலவீனமாக இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்று விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் விபத்து பகுதியை நேற்று மாலை நேரில் பார்வையிட்டார். கட்டுமானப் பணியை மேற்கொண்ட கட்டுமான நிறுவனம், ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
இந்த நிலையில் விபத்து குறித்து ஹென்னூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இந்த கட்டுமானத்தை மேற்கொண்டு வரும் ஆந்திராவைச் சேர்ந்த முனிராஜு ரெட்டி என்பவரை காவல்துறையினர் தேடி வருவதாகக் கூறப்படுகிறது.