இவ்வருடத்தின் கடந்த 9 மாதங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 3,045 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாடளாவிய ரீதியில் கடந்த 9 மாதங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 81 சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 20 பொலிஸ் அதிகாரிகளும், 3 கிராம உத்தியோகத்தர்களும், 45 அரச ஊழியர்களும், 22 சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் காணப்படுகின்றனர்.
இதேவேளை, கடந்த 9 மாதங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 68 நபர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 237 நபர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.