முட்டை விலையை நிர்ணயம் செய்ய விலை சூத்திரம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கையை முட்டை வர்த்தக சங்கங்கள் அரசுக்கு விடுத்துள்ளன.
இது தொடர்பாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க கருத்து தெரிவிக்கையில், “ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கு 25 ரூபாவிற்கும் குறைவாகவே செலவாகும் என்பதால் சந்தையில் ஒரு முட்டையை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும்.
முட்டை விலை தொடர்பான நெருக்கடி இன்னும் தீரவில்லை சந்தையில் முட்டை விலை 40 தொடக்கம் 45 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக குழுவை நியமித்து விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துங்கள்” என அவர் தெரிவித்துள்ளார். அண்மையிலும், முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவைத் தாண்டிய போதிலும் அரசாங்கம் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என விவசாய அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
அத்தோடு, முட்டையின் விலை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையே தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.இவ்வாறு, முட்டை விலை அதிகரிப்பு தொடர்பில் பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், இது குறித்து மக்களும் தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
மேலும், சில வியாபாரிகள் இருக்கும் விலையில் 10 ரூபாய் மற்றும் 15 ரூபாய் அதிகம் வைத்து விற்பதால் மக்கள் பாரிய நெருக்கடிக்கு உள்ளாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.