சிங்கராஜா உலக மரபுரிமை வனம் மற்றும் ஹொர்டன்தென்ன தேசிய பூங்காவுக்குள் நுழைந்து, நாட்டின் தேசிய வளங்களைக் களவாடிய ரஷ்யப் பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் இருவரும் கடந்த ஓகஸ்ட் மாதம் (28) இந்த பகுதியில் பிரவேசித்து உயிரியல் வளங்களை கொள்ளையடிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நுவரெலியா ஹொர்டன்தென்ன தேசிய வன பூங்காவின் பிரதி பாதுகாப்பு பொறுப்பதிகாரி அதிகாரி டபிள்யூ.எம்.எல்.கே.வாசல, நுவரெலியா கால்வஸ்லேண்ட் தேசிய வன பூங்காவின் பாதுகாப்பு அதிகாரி பிரபாஷ் கருணாதிலக ஆகியோரினால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் ,எம்பிலிப்பிட்டிய நீதிமன்றத்தில் நேற்று (15) ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போது, 11 கோடி 68 லட்சத்து பத்தாயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறு நீதவான் திலும் பெர்னாண்டோ உத்தரவிட்டார். வனவிலங்கு திணைக்களத்தின் வரலாற்றில் விதிக்கப்பட்ட மிகப்பெரிய அபராத தொகை இதுவாகும்.
இதற்கு முன்னர் கடந்த செப்டெம்பர் (03) யால பூங்காவில் தும்பிகளை பிடித்த, இத்தாலிய நாட்டைச் சேர்ந்த தந்தை மற்றும் மகனுக்கு திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றம் 06 கோடி ரூபா அபராதம் விதித்தது. இதுவே அப்போது மிகப் பெரிய அபராதமாக கருதப்பட்டது.
இந்நிலையில், சிங்கராஜா வனம் மற்றும் ஹொர்டன் சமவெளி தேசிய பூங்காவிற்குள் பிரவேசித்து, உயிரியல் வளங்களை சேகரித்ததற்காக ரஷ்யாவின் மொஸ்கோவில் வசிக்கும் சவேலி அலெக்ஸாண்ட்ரோவிச் மற்றும் நிகோலாய் இலிச் ஆகியோருக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.
சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கையை முன்வைத்தார். அபராதத் தொகையை தவணை முறையில் செலுத்த உத்தரவிடுமாறும், அபராதத் தொகையில் 500,000 ரூபாவை அன்றைய தினம் நீதிமன்றத்தில் செலுத்துவதாகவும் தெரிவித்தார். இந்தக் கோரிக்கைக்கு வனவிலங்கு அதிகாரிகள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இதனால் இரு தரப்பு விடயங்களை கவனத்தில் கொண்ட நீதவான், வழக்கை எதிர்வரும் (26) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்டார். சந்தேகநபர்கள் இருவரின் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டது. அபராதம் முழுமையாக செலுத்தப்படும் வரை இவை நீதிமன்றத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.