மஸ்கெலியா நகரில் உள்ள பிரதான வீதியையும் அஞ்சலக வீதியையும் இணைக்கும் குறுக்கு வீதிகளில் தீ பரவாமல் தடுக்க வழங்கப்பட்ட சகல காணிகளும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சட்ட விரோதமாக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. அதற்கான அனுமதியை அம்பகமுவ பிரதேச சபை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபை ஆகியன வழங்கியுள்ளது.
சட்ட விரோதமாக கட்டிடங்கள் கட்டப்பட்டதால் பாரிய அளவிலான அசௌகரியத்தை பொதுமக்கள் எதிர்கொள்கின்றனர்.
குறிப்பாக, பிரதான வீதியையும் அஞ்சலக வீதியையும் இணைக்கும் குறுக்கு வீதியில் அத்துமீறி கட்டப்பட்டுள்ள இரண்டு வியாபார நிலையத்தால் அடிப் பாதையாக மாறியுள்ளது. அத்துடன் அந்த வீதியில் அமைந்துள்ள கள்ளுக்கடையில் குடித்து விட்டு அப் பகுதியில் சிறுநீர் கழிப்பதால் ஒரே துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதி குடியிருப்புக்களில் வாழ்ந்து வரும் குழந்தைகள், மற்றும் பாடசாலை மாணவர்கள் பாரிய அளவில் அசௌகரியத்தை எதிர் நோக்குவதாக புகாரளித்துள்ளனர்.
குடியிருப்பாளர்கள் இந்த விடயம் குறித்து மஸ்கெலியா பிரதேச சபை, பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர் .
குடியிருப்பாளர்கள் மற்றும் பொது மக்களின் வேண்டுகோள், 1968 ம் ஆண்டு மஸ்கெலியா நகரம் புதுப் பொலிவுடன் புதிய நகரமாக கட்ட அனுமதி வழங்கியது போல சட்ட விரோதமாக கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களும் அகற்றப்பட்டு பாதசாரிகள், குடியிருப்பாளர்கள் நலன் பேணப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
இதற்கு தீர்வு பெற்றுக் கொடுக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அமைச்சு முன் வரவேண்டும் எனவும் தெரிவித்தனர்.