பத்தரமுல்ல பிரதேசத்தில் அலட்சியம் காரணமாக யுவதியொருவர் தனது உயிரைப் பணயம் வைக்க வேண்டிய அவலமான செய்தி ஒன்று பதிவாகியுள்ளது. 30 வயதான ஹன்சினி பாக்யா என்ற யுவதி உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளராக பணியாற்றி வந்தார்.
கடமை முடிந்து கடந்த 11ம் திகதி மாலை 6.40 மணியளவில் ஹன்சினி தனது தங்கும் விடுதிக்கு வந்துள்ளார். பத்தரமுல்லை பிரதான வீதி சம்பத் பிளேஸில் அமைந்துள்ள 2 மாடி வீட்டின் மேல் மாடியில் மற்றுமொரு தோழியுடன் அவர் தங்கி இருந்துள்ளார்.
ஹன்சினி இரவு உணவை தயார் செய்து கொண்டிருந்த போது குளியலறையில் இருந்த தோழிக்கு ஏதோ விழும் சத்தத்துடன் அலறல் சத்தம் கேட்டது. உடனடியாக குளியலறையிலிருந்து வெளியே வந்த தோழி, தங்குமிடத்திற்குப் பின்னால் உள்ள பாதுகாப்பற்ற இடத்திலிருந்து ஹன்சினி கீழே விழுந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேல் தளத்தில் உள்ள குறித்த பாதுகாப்பற்ற இடத்திற்கு எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. பின்னர், ஹன்சனியை உடனடியாக 1990 நோயாளர் காவு வண்டியை கொண்டு வந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பிரதேசவாசிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இருப்பினும், வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஹன்சினி நேற்று மதியம் உயிரிழந்துள்ளார். இதேவேளை யுவதியின் துரதிர்ஷ்டவசமான மரணம் சமூக ஊடகங்களில் கூட பெரிதும் விவாதிக்கப்பட்டது.
அவளது தங்குமிடத்தில் உள்ள ஆபத்தான இடத்தைச் சரிசெய்திருந்தால், இந்த பெண் உயிரிழந்திருக்க மாட்டார், ஹன்சினியின் மரணம் வாடகை வீடு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமின்றி இந்நாட்டிற்கும் ஒரு சிறந்த பாடமாகுமென சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.