தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு உரித்தான 21 அடி நீளமான இரும்பு தூணைக் களவாடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் நேற்று மாலை மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள கிலன்டில் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு உரித்தான 21 அடி நீளம் கொண்ட இரும்புத் தூண் ஒன்றை மஸ்கெலியா கிலன்டில் தோட்டப் பிரிவில் வசிக்கும் மூன்று பேர் இணைந்து மூன்று துண்டுகளாக வெட்டிய வேளையில், ஹட்டன் தொலைத்தொடர்பு நிறுவன அதிகாரி மஹிந்த ஹேவாகே, மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஏ.எஸ்.புஷ்பகுமார மற்றும் சாஜன்களான வீ.பேரின்பநாயகம், எஸ்.ரெங்கரன் ஆகியோர் வெட்டப்பட்ட இரும்புத் தூண் துண்டுகளுடன் குறித்த நபர்களையும் கைது செய்தனர்.
குறித்த நபர்களை இன்று 9 ம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது, சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 23 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு சொந்தமான பெறுமதி மிக்க பல கம்பங்கள் காணாமல் போனமையால் இது குறித்து சகல பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் தொலைத்தொடர்பு நிலைய அதிகாரி கூறினார்.