காலி சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கையடக்கத் தொலைப்பேசித் துணைக் கருவிகள் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காலி சிறைச்சாலையின் அவசரகால புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சோதனையின் போது, 53 கையடக்கத் தொலைபேசிகள், சார்ஜர்கள், டேட்டா கேபிள்கள் மற்றும் பல்வேறு கையடக்கத் தொலைப்பேசி துணைக் கருவிகள் என்பன மீட்கப்பட்டுள்ளதுடன்,
சில கைதிகள் தங்களிடம் இருந்த கையடக்கத் தொலைபேசிகளை சிறைக் கூண்டுகளின் ஜன்னல்கள் வழியாக வெளியே வீசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட பொருட்களானவை சிறைக் கூண்டுகளின் சுவர்கள், பாய்கள் மற்றும் தலையணைகளில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.