இலங்கையில் இடம்பெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தூய அரசியலுக்காக பெண்கள் மற்றும் இளைஞர்கள் பங்குபெற்றுவதை மேம்படுத்துவதற்கான மாவட்டமட்ட விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று மட்டக்களப்பு தனியார் விடுதியில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின் போது மாவட்டத்தில் வாக்காளர்களின் வாக்களிப்பு வீதத்தினை கூட்டுதல் மற்றும் நிராகரிக்கப்படுகின்ற வாக்களிப்பினை எவ்வாறு தடுப்பது சம்பந்தமான கருத்துரைகளும் முன்வைக்கப்பட்டது.
பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களின் போது பெண்கள், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்தல் சம்பந்தமாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்க வேண்டிய அடிப்படை அரசியல் பண்புகள் பற்றியும் விரிவான விளக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இன்றைய தூய அரசியலுக்காக என்ற நிகழ்ச்சி திட்ட விளக்க உரையை திரு எஸ். கோபிகாந்த் அவர்களும் நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் எனும் புதிய கருத்துரையை திரு எஸ். சொர்ணலிங்கம் அவர்களும் அரசியலில் பெண்கள் பற்றிய விளக்க உரையை மார்ச் 12 இயக்கத்தின் திட்ட முகாமையாளர் ருக்ஷி பெனாண்டோ அவர்களும் வழங்கி வைத்தனர்.
இந்த கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசு கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட மாவட்டத்தில் உள்ள ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.