இன்றையதினம் யாழில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன்போது கலைவாணி வீதி, வடலியடைப்பு, பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் சங்கீதா (வயது 33) என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில் அந்த பெண், அடகு வைத்த நகைகளை மீட்கும் நிதி நிறுவனம் ஒன்றிடம் ஒரு தொகை பணத்தை பெற்றுக்கொண்டு, நகையை மீட்பதற்காக சென்றுள்ளார்.
இருப்பினும் குறித்த பெண்ணின் தொலைபேசி இயங்காத நிலையில் அந்த நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்று பார்த்தவேளை அவர் தூக்கில் தொங்கியவாறு காணப்பட்டார்.
இதன்போது அங்கு வந்த அயலவர்கள், நிதி நிறுவன ஊழியர்களின் நெருக்கடியால் தான் குறித்த பெண் தூக்கில் தொங்கியதாக நினைத்து நிதி நிறுவன ஊழியர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த ஒரு ஊழியர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
குறித்த பெண்ணின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார். மரணத்திற்கான காரணம் என்ன என இதுவரை தெரியவரவில்லை.