நவம்பர் 5 ஆம் திகதி நடக்க உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மீது அடுத்தடுத்து கொலை முயற்சிகள் நடந்து வருவது குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த ஜூலை 13 ஆம் திகதி பென்சில்வேனியாவிலும் கடந்த செப்டம்பர் 16 ஆம் திகதி புளோரிடாவிலும் ட்ரம்ப் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
தொடர்ந்து டிரம்ப் குறிவைக்கப்பட்டு வரும் நிலையில் ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸின் பிரச்சார அலுவலகத்தின் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதல்களுக்கு வெளிநாட்டு சதி காரணமா என்ற கேள்விகள் எழுந்தவரும் நிலையில் தனது உயிருக்கு ஈரான் நாட்டினால் அதிக அச்சுறுத்தல் இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.
தனது சமூக வலைதள பக்கத்தில் டிரம்ப் கூறியதாவது, எனது உயிருக்கு ஈரானால் அச்சுறுத்தல் உள்ளது. மொத்த அமெரிக்க இராணுவமும் விழுப்புடன் காத்திருக்கிறது. ஏற்கனவே என்னை கொல்வதற்காக ஈரான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. ஆனால் மீண்டும் அவர்கள் என்னை கொல்ல முயற்சிக்கக்கூடும். இது யாருக்கும் நல்லதல்ல. இதற்கு முன் இருந்ததை விட என்னைச் சுற்று அதிக பாதுகாவலர்கள் ஆயுதத்துடன் எந்நேரமும் காவலுக்கு இருக்க வேண்டிய சூழல் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் வைத்து கொல்லப்பட்டதும்,அதற்கு இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று அமெரிக்கா ஈரானுக்கு அழுத்தம் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.