ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெற்றுவரும் சுற்றுலா நியூசிலாந்து – இலங்கை அணிகளுக்கிடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவதும், இறுதியுமான போட்டி இன்று (26) காலை 10.00 மணிக்கு காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது.
இரு அணிகளுக்குமிடையில் கடந்த 18ஆம் திகதி ஆரம்பமாகி கடந்த திங்கட்கிழமை (23) நிறைவடைந்த முதல் டெஸ்ட் போட்டியில் 63 ஓட்டங்களினால் வெற்றியீட்டிய இலங்கை அணி நியூசிலாந்துடன் 5 ஆண்டுகளின் பின்னர் முதல் வெற்றியை பதிவு செய்தது. மேலும் நியூசிலாந்து அணியுடன் தொடர்ச்சியாக ஹெட்ரிக் தோல்விகளை சந்தித்த பின்னர் இலங்கை அணி மீண்டும் வெற்றிப்பயணத்தை ஆரம்பித்தது.
அது மாத்திரமல்லாது அண்மையில் இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்து அணியுடனான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3வது டெஸ்ட் போட்டியிலும், நியூசிலாந்துடனான முதல் டெஸ்டிலும் வெற்றியிட்டிய இலங்கை அணி தொடர்ச்சியான இரு வெற்றிகளுடன் வலம்வருகிறது.
இந்நிலையில் இன்று ஆரம்பமாகும் இந்த 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று, அல்லது போட்டி சமநிலையில் நிறைவடைந்தால் இலங்கை அணி 15 ஆண்டுகளின் பின் நியூசிலாந்துடன் டெஸ்ட் தொடர் வென்ற வரலாற்றை பதிவுசெய்யும்.
இலங்கை அணி கடைசியாக நியூசிலாந்து அணியுடன் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கடந்த 2009ஆம் ஆண்டு சொந்த மண்ணில் வைத்து 2-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியதே சாதனையாகும். இதேவேளை இலங்கை அணி காலி மைதானத்தில் நியூசிலாந்துடன் விளையாடிய 5 ஆட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளமையும் விசேட அம்சமாகும்.
எனவே இலங்கை அணி இதே காலி மைதானத்தில் நடைபெறவுள்ள 2வது டெஸ்ட் போட்டியை வெற்றிகொண்டு இலங்கை அணி 15 ஆண்டு தாகத்தை தீர்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.