இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் இன, மதபேதங்களை மையப்படுத்தி பிரிவினைகளை ஊக்குவிக்காத, மிக அமைதியான முறையில் நடைபெற்ற தேர்தலாக அமைந்திருந்தது என ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழு நாட்டுக்கு வருகை தந்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டருந்த நிலையில், தேர்தல் நிறைவடைந்ததையடுத்து ஊடகவியலாளர் மாநாடொன்றை இன்று கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் முன்னெடுத்திருந்தது.
அங்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவின் தலைமை அதிகாரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு மேலும அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் இன, மதபேதங்களை மையப்படுத்தி பிரிவினைகளை ஊக்குவிக்காத, மிக அமைதியான முறையில் நடைபெற்ற தேர்தலாக அமைந்திருந்தது.
தேர்தல் ஆணைக்குழு வெளிப்படைத்தன்மை, செயற்திறன்மிக்க தன்மையுடன், எவ்வித சந்தேகங்களையும் தோற்றுவிக்காத வகையில் செயற்பட்டது.
ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட்ட 39 பேரில் பெண் வேட்பாளர்கள் எவரும் உள்ளடங்காமை மிகுந்த கரிசனைக்குரியது. எதிர்வருங்காலத்தில் இதுகுறித்து அவதானம் செலுத்தப்படவேண்டியது அவசியம்.
39 வேட்பாளர்களில் சிலர் பிரசார நடவடிக்கைகளைக்கூட முன்னெடுக்கவில்லை. அவர்களுக்காக அரச நிதி செலவிடப்படுவது கரிசனைக்குரிய விடயமாகும். இதனை சீரமைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்
இலங்கை வரலாற்றில் நடைபெற்ற மிகவும் அமைதியான தேர்தல் இதுவென தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கூறப்பட்ட அதே தினத்தில், திடீரென ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை ஒன்றுக்கொன்று முரணான தன்மையைக் காண்பிக்கிறது.
தேர்தல் பிரசாரங்களின்போது சம்பள உயர்வு, வட்டி அற்ற கடன் போன்ற நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்கும் போக்கு ஏற்புடையதல்ல.
ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவுக்கு தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதியில் 5000 முறைப்பாடுகளும், தேர்தல் தினத்தன்று 600 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றன என ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவின் அதிகாரி மேலும் தெரிவித்தார்.