“அரசின் இந்த ஒடுக்குமுறைச் சூழலைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ஒட்டுமொத்த மக்களும் வீதிகளில் இறங்கிப் போராடும் நாள் வெகுதொலைவில் இல்லை” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் அரசுக்கு எதிராக இவ்வாறு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
விவசாயிகளின் தற்போதைய அவல நிலை குறித்து அவர் மேலும் பேசுகையில்,
“தேர்தல் காலத்தில் விவசாய மக்களிடம் வாக்குக் கேட்டுப் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசிய அரசு, இன்று அவர்களைக் கைவிட்டுள்ளது.
தற்போது விவசாயிகளுக்குத் தேவையான தரமான விதைகள், உரம், யூரியா, களைக்கொல்லிகள் மற்றும் ஏனைய உபகரணங்களின் விலைகள் பன்மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றன.
கிடைக்கும் உரமும் தரம் குறைந்ததாகவும், அளவு குறைவாகவும் உள்ளது. தமது நகை நட்டுக்கள் மற்றும் சொத்துக்களை அடமானம் வைத்து விவசாயம் செய்த விவசாயிகள் இன்று நடுத்தெருவில் நிற்கின்றனர்.
நெல் கிலோவுக்கு 150 ரூபா உத்தரவாத விலையைச் சட்டமாக்கித் தருவோம் எனக் கூறிவிட்டு, இன்று வரை அதனைப் பெற்றுக்கொடுக்காமல் விவசாயிகளின் வயிற்றில் அடித்துள்ளனர்.
இதுமட்டுமன்றி, மனித – யானை மோதல்களினால் ஏற்படும் பயிர்ச் சேதங்கள் மற்றும் உயிரிழப்புகளுக்கு இன்றுவரை நிரந்தரத் தீர்வுகள் எட்டப்படவில்லை.” – என்றார்.
அரச சேவையின் வீழ்ச்சி குறித்துச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர்,
“இந்த அரசு அரச ஊழியர்களையும் திட்டமிட்டு ஏமாற்றியுள்ளது. நாட்டின் நிர்வாகக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் முக்கிய பிரிவான பிரதேச செயலாளர்களுக்கு உரிய எரிபொருள் கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய வசதிகள் எவையும் அரசால் வழங்கப்படவில்லை.
இதன் காரணமாக, தங்களின் சொந்தச் செலவில் எரிபொருள் அடித்துக் கடமையாற்ற முடியாது என அவர்கள் அறிவித்துள்ளனர்.
திங்கட்கிழமைகளில் வேறு கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை எனவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர். கிராம உத்தியோகத்தர்கள் தொடக்கம் சகல அரச சேவை ஊழியர்களும் தற்பொழுது கடுமையான மனச்சோர்வுக்கு ஆளாகியுள்ளனர்.” – என்றார்.
“விவசாயிகளையும் அரச ஊழியர்களையும் ஓரங்கட்டிய இந்த அரசு, பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத் துறையையும் தற்போது முழுமையாகச் சீரழித்துள்ளது.
பாரம்பரிய சர்வாங்க மற்றும் நிபுணத்துவ வைத்தியர்களுக்கான எழுத்து மற்றும் பிரயோக பரீட்சைகளை அரசு இடைநிறுத்தியுள்ளது.
அத்துடன், 700 இற்கும் அதிகமான பாரம்பரிய சர்வாங்க மருத்துவர்களின் உத்தியோகபூர்வப் பதிவுகளும் தன்னிச்சையாகத் தடை செய்யப்பட்டுள்ளன.” – என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இறுதியாக அரசுக்கு அவசர கோரிக்கை விடுத்த சஜித் பிரேமதாஸ,
“அரசின் பலவீனமான மற்றும் முறையற்ற கொள்கைகள் காரணமாகவே ஒட்டுமொத்த பொதுமக்களும் இன்று சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
எனவே, திறைசேரியில் காணப்படும் நிதியைப் பயன்படுத்தி மக்களுக்குத் தேவையான அவசர நிவாரணங்களை உடனடியாக வழங்கி, அவர்களின் வாழும் உரிமையை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
மக்கள் நலனை விரும்பும் ஒரு பொறுப்புமிக்க எதிர்க்கட்சியாக, மக்களின் உரிமைகள் வென்றெடுக்கப்படும் வரை நாங்கள் நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் எப்போதும் விழிப்போடு நின்று போராடுவோம்.” – என்றார்.










