“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷக்கள் ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தையும் படுகொலை செய்தவர்கள் என்று நாட்டின் உயர்நீதிமன்றமே ஏகமனதாகத் தீர்ப்பளித்துள்ளது.
அவ்வாறு நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்கள்தான், இன்று வெட்கமின்றி பொருளாதாரம் குறித்துப் பேசுகின்றார்கள்” – என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க கடுமையான சாடல்களை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் எதிர்க்கட்சிக் கூடாரங்களில் உள்ள கூட்டுப் பொறுப்பாளர்களுக்கு எதிராக இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் நாடாளுமன்றில் உரையாற்றுகையில்,
“கடந்த காலங்களில் இந்த நாட்டை மிக மோசமான வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்களும், பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்ட ஊழல்வாதிகளும் இன்று தங்களின் சுயரூபங்களை மறைத்துக்கொண்டு, அரசியல் சுயலாபங்களுக்காக ஒன்றாக இணைந்து ஒரே கூடாரத்துக்குள் தஞ்சமடைந்துள்ளனர்.
இவ்வாறான ஊழல்வாதிகள் மற்றும் நாசகார சக்திகளின் தற்காலிக அச்சுறுத்தல்களுக்கோ அல்லது சலசலப்புகளுக்கோ ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை.
நாட்டு மக்களின் சொத்துக்களைச் சூறையாடி, அரச அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய அனைத்து ஊழல்வாதிகளுக்கும் எதிராக எவ்வித அரசியல் தராதரமும் பாராது மிக விரைவில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கடந்த காலப் பழிவாங்கல்களைப் போலன்றி, இது முறையான நீதிமன்ற விசாரணைகளின் ஊடாகச் சான்றுகளுடன் நிரூபிக்கப்படும். எனவே, மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த இத்தகைய ஊழல்வாதிகளையும், அவர்களின் போலியான கருத்துக்களையும் எமது அரசு ஒருபோதும் பொருட்படுத்தப் போவதில்லை.” – என்றார்.










