வரலாற்று சிறப்புமிக்க பொன்னாலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் தேவஸ்தானம் மற்றும் தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் தேவஸ்தானம் ஆகியவற்றின் தர்மகர்த்தாவாக பெரும் தொண்டாற்றி சிவபதம் அடைந்த மதிப்பிற்குரிய சிவப்பிரகாசம் கயிலைநாதன் ஐயா அவர்களின் நினைவுக்கல் விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வருடம் தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரியம்மன் தேவஸ்தான தொண்டர் சபையினர் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் வப்பிரகாசம் கயிலைநாதன் ஐயாவின் திருவுருவ படம் அடங்கிய கருங்கல் நினைவுக் கல் ஒன்றினை நிறுவியிருந்தார்கள்.
இன்று அந்த நினைவுக்கல் விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டிருப்பது மிகவும் கவலைக்குரியதும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதுமான செயலாகும்.
ஒரு ஆலயத்தில் இடம்பெற்றுள்ள இத்தகைய செயல், அந்த நபரின் சேவையை மட்டுமல்லாது ஆலயத்தின் புனிதத்தன்மையையும் அவமதிக்கும் செயலாகும். கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், நினைவுச் சின்னங்களை சேதப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
இச்செயலை அனைவரும் கண்டிப்பதுடன், இதற்குப் பொறுப்பானவர்கள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.
எதிர்வரும் 19ஆம் திகதி அம்பாளின் பெரும் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ள நிலையில் இந்த செயற்பாடு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.










