தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ நுழைவாயிலுக்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து காலி நோக்கி அதிவேக நெடுஞ்சாலை வழியாகப் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த அந்த பேருந்து, பின்னதுவ நுழைவாயிலை நெருங்கிய போது கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த பாதுகாப்புப் பக்க வாயிலையும் உடைத்துக் கொண்டு சென்று அருகில் இருந்த பிரதான தூண் ஒன்றில் மோதியுள்ளது. இதனாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதுடன் பேருந்துக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
விபத்து நடந்த உடனே விரைந்து செயற்பட்ட பின்னதுவ போக்குவரத்துப் பொலிஸார் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைப் பராமரிப்பு ஊழியர்கள், பொதுமக்கள் உதவியுடன் பேருந்துக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். விபத்தில் காயமடைந்த 10 பேரும் சிகிச்சைக்காகக் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து காரணமாகத் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ நுழைவாயில் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துத் தடங்கல் ஏற்பட்டது.
விபத்துக்கான காரணம் குறித்துப் பின்னதுவ அதிவேக நெடுஞ்சாலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










