பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky), வின்ட்சர் கோட்டையில் (Windsor Castle) பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸை (King Charles III) நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தத் தனிப்பட்ட சந்திப்பின் பின்னர், உக்ரைனுக்கு பிரித்தானியா வழங்கி வரும் வலுவான ஆதரவிற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி Zelensky, எதிர்காலத்தில் உக்ரைனுக்கான உத்தியோகபூர்வ அரசு முறைப் பயணமொன்றை மேற்கொள்ளுமாறு மன்னருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை லண்டனில் உள்ள டவுனிங் வீதியில் (10 Downing Street) பிரித்தானியப் பிரதமர் சேர் கீர் ஸ்டார்மர், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மனி அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோரை உக்ரைன் ஜனாதிபதி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன் பின்னர், உக்ரைனுக்கான தங்களது கூட்டு ஆதரவை உறுதிப்படுத்திய ஐரோப்பியத் தலைவர்கள், ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ‘நீதியான மற்றும் நீடித்த’ உடன்படிக்கையொன்றை எட்டுமாறு வலியுறுத்தியுள்ளனர்.










