மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் பகுதியில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மாமாங்கம் பிரதேசத்தில் கிராமசேவையாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோர் சேவை வழங்கும் கட்டிடத்தினை உடைத்து கட்டப்போகதாவ தெரிவித்து அங்கு வழங்கப்பட்ட சேவைகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அதனை கண்டித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த கட்டிடம் 1998ஆம் ஆண்டு சமுர்த்தி பயனாளிகளுக்காக கட்டப்பட்டு பின்னர் தொழில் பயிற்சி அதிகாரசபையினால் தொழில் பயிற்சி வழங்கும் நிலையமாக பயன்படுத்தப்பட்டுவந்த நிலையில் அதுவும் கைவிடப்பட்டிருந்த நிலையில் மாமாங்கம் பிரதேசத்தின் கிராம சேவையாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஒரே இடத்தில் சேவையினை வழங்கும் நிலையமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த நிலையத்தினை தொழில் பயிற்சி நிலையமாக அமைக்கும் வகையில் புனரமைப்பு செய்யவுள்ளதாக கூறிய நிலையில் அங்கு வழங்கப்பட்டு வந்த சேவைகள் வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதேநேரம் குறித்த நிலையத்துடன் இணைந்ததாக மேலும் ஒரு கட்டிடம் நீண்டகாலமாக உடைந்த நிலையில் காணப்படுவதனால் அதனை புனரமைத்து தொழில் பயிற்சி நிலையத்தினை அமைக்குமாறும் இந்த கட்டிடத்தில் அதன் சேவைகளை பெறுவதற்கான வழியை ஏற்படுத்தி தருமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறுவதற்கான வசதி இங்கே மட்டும் உள்ளதாகவும் வேறு இடத்தில் மாற்றும்போது சேவைகள் பிரிந்துசெல்வதனால் வயோதிபர்கள் உட்பட பலர் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபுவினை தொடர்புகொண்டு கேட்டபோது,
குறித்த கட்டிடத்தினை புனரமைப்பு செய்து மீண்டும் கிராம சேவையாளர்கள் மற்றும் ஏனைய சேவைகளுக்கே வழங்கவுள்ளதாகவும் வேறு தேவைகளுக்கு குறித்த கட்டிடம் வழங்கப்படாது எனவும் தெரிவித்தார்.












