கத்தாரில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற ஈரானின் முதன்மைப் பேச்சாளர் மொஹமட் பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf) உள்ளிட்ட ஈரானிய தூதுக்குழுவினர் தற்பொழுது நாடு திரும்பியுள்ளனர்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு சுமுகமான உடன்பாட்டை எட்டுவதற்கான மத்தியஸ்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஈரானிய குழுவினர் கத்தார் சென்றிருந்தனர்.
இந்த நிலையிலேயே, ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகரும் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான மொஹமட் பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf) உள்ளிட்ட குழுவினர் தற்பொழுது ஈரான் திரும்பியுள்ளனர்.
எனினும் இரண்டு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் தற்போதைய நிலை மற்றும் ஏன் குறித்த குழுவினர் நாடு திரும்பினர் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த பேச்சுவார்த்தைக் குழுவில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி மற்றும் ஈரானிய மத்திய வங்கியின் ஆளுநர் அப்துல்நாசர் ஹெம்மாதி ஆகியோரும் இணைந்திருந்தனர்.
ஈரானின் மத்திய வங்கியின் ஆளுநர் இந்த தூதுக்குழுவில் சேர்க்கப்பட்டமையானது, வொஷிங்டனால் முடக்கப்பட்டுள்ள ஈரானின் நிதிச் சொத்துக்களை விடுவிப்பது குறித்து பேசியிருக்கலாம் என்பதை புரிந்துக்கொள்ள முடிவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முன்னதாக இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட்டதாக கூறப்பட்டது.
இருந்தபோதும், நேற்று அமெரிக்கா தெற்கு ஈரானில் நடத்திய தாக்குதல் மற்றும் ஈரான், அமெரிக்க வான்படைக்கு சொந்தமான ஆளில்லா வானூர்தியை சுட்டுவீழ்த்தியதாக கூறப்பட்டமை என்பன இந்த பேச்சுக்களில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை.










