இலங்கையில் நிலவி வரும் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் டொலர் விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு உடனடியாகச் சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கிடையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட தொலைபேசி உரையாடலின் போதே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கூட்டம் நடைபெற்றது.
நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழல், அனர்த்தங்களுக்குப் பின்னரான நிதி முகாமைத்துவம் மற்றும் சர்வதேச சவால்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது, நிலவும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி மாநாடொன்றை உடனடியாகக் கூட்டுமாறு அரசை வலியுறுத்துவது என்றும், இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேரடியாக ஜனாதிபதியைத் தொடர்புகொண்டு அறிவிப்பது என்றும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
அந்த இணக்கப்பாட்டின்படி, நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைத் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, எதிர்க்கட்சிகளின் கூட்டுத் திட்டத்தை முன்மொழிந்து சர்வகட்சி மாநாட்டின் அவசியத்தை வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சித் தலைவரின் இந்த முன்மொழிவுக்குப் பதிலளித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தான் தற்போது உத்தியோகபூர்வக் கடமைகள் நிமித்தம் மட்டக்களப்பில் தங்கியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், தனது மாகாண விஜயங்களை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பியவுடன், இந்தச் சர்வகட்சி மாநாட்டை கூட்டுவது மற்றும் அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து தனது இறுதிப் பதிலைத் தெரிவிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஜனாதிபதி அறியப்படுத்தியுள்ளார்.
நாட்டில் டொலர் கையிருப்பு மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே நாடாளுமன்றத்திலும் வெளியிலும் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ள தற்போதைய காலகட்டத்தில், இரு முக்கிய தலைவர்களுக்கும் இடையே இடம்பெற்றுள்ள இந்தத் தொலைபேசி உரையாடல் அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.










