ஐக்கிய இராச்சியத்துக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துகொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று சனிக்கிழமை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக நாடு திரும்பியுள்ளார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் – பொருளாதார சீர்திருத்தங்களை சர்வதேச சமூகத்துக்குத் தெளிவுபடுத்தல், இருதரப்புக் கல்வி மற்றும் பிராந்தியப் பாதுகாப்பை மேம்படுத்தல் மற்றும் பொதுநலவாய மாநாடுகளில் பங்கேற்றல் ஆகிய நோக்கங்களை மையமாகக் கொண்டு மே 18 முதல் 22 வரை இந்த உத்தியோகபூர்வ விஜயம் அமைந்திருந்தது.
பிரதமரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, இவ்விஜயத்தின் முக்கிய விவரங்கள் வருமாறு:-
சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் பிரதமர் ஆற்றிய விசேட உரைகள்
சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி கற்கைகள் நிறுவனத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய பிரதமர், இலங்கையின் சமீபத்திய அரசியல் மற்றும் பொருளாதார அனுபவங்களை உலகக் கல்வியாளர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டார். நல்லாட்சி, ஜனநாயகப் பொறுப்புக்கூறல், சமூகப் பாதுகாப்பு மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்களைச் சமநிலைப்படுத்துவதில் இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அவர் விவரித்தார்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த விரிவுரையை நிகழ்த்திய பிரதமர், அர்த்தமுள்ள சமூக – பொருளாதார சீர்திருத்தங்களை அடைய முயற்சிக்கும் நாடுகள் எதிர்கொள்ளும் யதார்த்தங்கள் குறித்து விளக்கமளித்தார். அத்துடன், கல்விமான்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
உயர் அதிகாரிகளுடன் இருதரப்புப் பேச்சுகள்
ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான செயலாளர் இவெட் கூப்பரைச் சந்தித்த பிரதமர், அண்மையில் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ சூறாவளியின் போது பிரித்தானியா வழங்கிய அவசர ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார். இலங்கையின் ஏற்றுமதி மற்றும் வர்த்தக மேம்பாடு, மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் புவிசார் அரசியல் சவால்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
ஐக்கிய இராச்சியத்தின் கல்விச் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சனைச் சந்தித்த போது, இரு நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான கூட்டுறவு, உயர்கல்வித் தரத்தை உறுதிசெய்தல், மாணவர் பரிமாற்றம் மற்றும் ஆராய்ச்சித் துறைகளை வலுப்படுத்துவது குறித்து இணக்கம் காணப்பட்டது.
லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் பிரித்தானிய கவுன்சிலின் கல்வி நிபுணர்களைச் சந்தித்த பிரதமர், இலங்கையின் பாடசாலைக் கட்டமைப்பில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்துப் பேசினார். குறிப்பாக, இலங்கையில் ஆசிரியர் பயிற்சி, ஆங்கில மொழித் திட்டங்கள் மற்றும் மாணவர்களுக்கான மொழித்திறன் விருத்திக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்வது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
பொதுநலவாய கற்றல் பேரவை மற்றும் செயலாளர் நாயகத்துடனான சந்திப்பு
மே 21, 22 ஆகிய திகதிகளில் நடைபெற்ற 2026 பொதுநலவாய கற்றல் பேரவையின் 43ஆவது நிர்வாகச் சபை அமர்வில் பிரதமர் கலந்துகொண்டார்.
இதன்போது, பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் ஷெர்லி அயோர்கோர் போச்வேயைச் சந்தித்து, உலகளாவிய காலநிலை மாற்றம், காலநிலை நிதியுதவி மற்றும் ஜனநாயக நல்லாட்சி குறித்துக் கலந்தாலோசித்தார். தொழில்நுட்ப உதவி மற்றும் கொள்ளளவு மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் இலங்கையைத் தொடர்ந்து ஆதரிக்கத் தயார் எனச் செயலாளர் நாயகம் இதன்போது பிரதமரிடம் உறுதியளித்தார்.
தனது பயணத்தின் இறுதிப் பகுதியாக, லண்டன் பௌத்த விகாரைக்கு விஜயம் செய்த பிரதமர், அதன் விகாராதிபதி வணக்கத்துக்குரிய போகொட சீலவிமல தலைமைத் தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார். அங்கு விகாரையின் கொண்டாட்ட ஏற்பாடுகள் குறித்தும், பிரித்தானியாவில் வாழும் இலங்கையர்களுக்காக விகாரை ஆற்றிவரும் நீண்டகால சேவைகள் குறித்தும் கலந்துரையாடியதுடன், லண்டனில் வாழும் இலங்கை சமூகத்தினரையும் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.














