ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட அதிரடி ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையை அடுத்து, டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட 21 முக்கிய சந்தேகநபர்கள் குறித்து இலங்கை பொலிஸார் விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, இலங்கை பாதுகாப்புத் தரப்பினரால் நீண்டகாலமாகத் தேடப்பட்டு வந்த பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களான “வனாத்தே குடு துமிந்த” மற்றும் “மகாவத்தே சாமர” ஆகியோரும் அடங்குவர்.
இவ்விவகாரம் குறித்து பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:
டுபாயில் நடைபெற்ற பிரம்மாண்ட ஆடம்பர விருந்தொன்றில் கலந்துகொண்டிருந்த போதே, அங்கு அதிரடியாகப் புகுந்த ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்புப் படையினர் இவர்களைக் கூண்டோடு கைது செய்திருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்த பெருமளவிலான பணம், சொகுசு வாகன ஆவணங்கள் மற்றும் தங்க நகைகள் உள்ளிட்ட அனைத்துப் பெறுமதிமிக்க பொருட்களையும் அமீரகப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் வெறும் ஆடைகள் மற்றும் கடவுச்சீட்டுகளுடன் மட்டுமே இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இக்குழுவில் இரு பெண்களும் அடங்குகின்றனர்.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் தகவல்படி, கடந்த 2025 ஆகஸ்ட் 8ஆம் திகதி பொரளையில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டு, மேலும் மூவர் படுகாயமடைந்த கொடூர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் முதன்மைச் சூத்திரதாரியாக “வனாத்தே குடு துமிந்த” செயற்பட்டுள்ளார்.
அவருடன் சேர்த்து நாடு கடத்தப்பட்டவர்களில் அவரது நெருங்கிய சகாக்கள் ஐவரும் புலனாய்வாளர்களால் விமான நிலையத்தில் வைத்து அடையாளம் காணப்பட்டுள்ளனர். குடு துமிந்த மற்றும் அவரது சகாக்கள் தற்சமயம் மேலதிக தீவிர விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நிலுவையிலுள்ள பல படுகொலைகள், கப்பம் கோரல் மற்றும் பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல் போன்ற பாரிய குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, பாதாள உலகத் தலைவர் “மகாவத்தே சாமர” மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
நாடு கடத்தப்பட்ட 21 நபர்களில், பாதாள உலகக் குழுவினரைத் தவிர எஞ்சிய பெரும்பாலான சந்தேகநபர்கள் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்துப் பொலிஸார் விவரித்துள்ளனர்:
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், டுபாயை இலக்கு வைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களை இந்த நபர்கள் தங்களது கைப்பேசிகளில் காணொளியாகப் பதிவு செய்துள்ளனர்.
பின்னர், ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், அந்தத் தடைசெய்யப்பட்ட காணொளிகளைச் சமூக ஊடகத் தளங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் கீழேயே இவர்கள் டுபாய் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இக்குழுவில் அச்சுறுத்தல் காணொளிகளைப் பகிர்ந்த குற்றச்சாட்டில் நாடு கடத்தப்பட்ட இரு பெண்களும் அடங்குவதுடன், அவர்கள் மீதான சட்ட நடவடிக்கை மற்றும் மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் தத்தமது உள்ளூர் பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.










