தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாழ்த்துத் தெரிவித்துள்ள நிலையில், ஜனாதிபதியின் இந்த வாழ்த்துக்கு முதல்வர் விஜய் தனது மனமார்ந்த நன்றிகளைப் பகிர்ந்துள்ளார்.
தனது வாழ்த்துச் செய்தியில், இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையிலான ஆழமான உறவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியிருந்தார்.
“வரலாறு, கலாசாரம், வணிகம் மற்றும் தலைமுறைகளைக் கடந்த மக்கள் இடையிலான வலுவான பிணைப்பால் இலங்கையும் தமிழகமும் இணைந்துள்ளன” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இருதரப்பு உறவுகள் வலுப்பெற்று வரும் நிலையில், வருங்காலம் பொருளாதார ரீதியாகப் பாரிய வாய்ப்புகளைக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தமிழக மக்களுக்கும் புதிய முதல்வர் விஜய்க்கும் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்த ஜனாதிபதி அநுரகுமார, இரு பிராந்தியங்களின் முன்னேற்றத்துக்காக இணைந்து செயற்பட விரும்புவதாகவும் கூறியிருந்தார்.
ஜனாதிபதி அநுரகுமாரவின் வாழ்த்துக்குப் பதிலளிக்கும் வகையில் முதல்வர் விஜய் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
“இலங்கை ஜனாதிபதியின் வாழ்த்துக்களால் நான் மிகுந்த கௌரவமடைகின்றேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த அன்பான செயலுக்குத் தனது ஆழ்ந்த நன்றிகளையும் அவர் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றம், அண்டை நாடான இலங்கையுடனான உறவில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.










