கிளிநொச்சி மாவட்டம், பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் இன்று ஆடு மேய்க்கச் சென்ற முதியவர் ஒருவர் அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முகமாலை, பொந்தர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய இளையவன் நல்லதம்பி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
வழமை போல இன்று காலை ஆடு மேய்ப்பதற்காகச் சென்ற மேற்படி முதியவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த உறவினர்கள் அவரைத் தேடிச் சென்றபோது, அப்பகுதியில் உள்ள பற்றைக்காட்டுப் பகுதியில் உடலில் அடிகாயங்களுடன் அவர் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து பளை பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர். முதியவரின் உடலில் அடிகாயங்கள் காணப்படுவதால், இது கொலையா அல்லது வேறு ஏதேனும் விபத்தா எனும் கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பட்டப்பகலில் முதியவர் ஒருவர் அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.










