திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி, சீனக்குடா பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மூதூர் நெய்தல் நகரைச் சேர்ந்த 40 வயதான மர்சூக் சப்ரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான லாஹீரின் மருமகன் ஆவார்.
கிண்ணியா பகுதியிலிருந்து உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த போது, எதிரே வந்த டிப்பர் ரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றது.
விபத்தின் வீரியத்தால் தூக்கி வீசப்பட்ட குறித்த நபரின் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்தார்.
விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து உடனடியாக மீட்கப்பட்டு திருகோணமலை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதிலும், துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
விபத்துக்குள்ளான டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










