உத்தியோகபூர்வ பயணமாக ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழ் நாடுதான் இந்தியாவின் ஜேர்மனி” எனக் குறிப்பிட்டார்.
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஜேர்மனிக்கு சென்றுள்ள அவர், ஜேர்மனி முதலீட்டு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இதன்போது, தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாகவும், அதிகளவிலான தொழிற்சாலைகள், திறமையான மனிதவளங்கள் மற்றும் உயர் நகர்மயமடைந்த மாநிலமாகவும் இருப்பதை விளக்கினார்.
இந்த மாநாட்டில், ₹3,819 கோடி மதிப்பிலான 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இதன் மூலம் 9,000 இற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த ஜேர்மனி பயணத்தில் மொத்தம் ₹7,020 கோடி மதிப்பிலான 26 ஒப்பந்தங்கள், 15,000 இற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின் தனது உரையில், ஜேர்மனியின் தொழில் நுணுக்கம், புதுப்பிப்பு திறன், கலையுணர்வு ஆகியவை தமிழ்நாட்டை ஈர்த்துள்ளது எனவும், “Made in Germany” தரச்சின்னமாக இருப்பது போலவே, “Made in Tamil Nadu” என்பதும் உலகளவில் தரத்திற்கான அடையாளமாக உருவாகிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் BMW, Daimler, Mercedes-Benz, Siemens, Bosch உள்ளிட்ட பல்வேறு ஜேர்மன் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ஏற்கெனவே வெற்றிகரமாக செயற்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மோட்டார் வாகனங்கள், மின்சார வாகனங்கள், மின்னணு உற்பத்தி, தோல் மற்றும் ஆடைத் தொழில், தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயர் மருத்துவ சேவைகள் போன்ற துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.










