இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2023 ஆம் ஆண்டு ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். முதல் பாகத்தை போல ‘ஜெயிலர் 2’ படத்திலும் மோகன் லால், சிவராஜ்குமார் ஆகியோர் கேமியோ ரோலில் நடிக்க உள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
‘ஜெயிலர்’ படத்தில் மலையாள நடிகர் விநாயகன் வில்லனாக நடித்த நிலையில், தற்போது இந்த ‘ஜெயிலர் 2’ படத்தில் இன்னொரு மலையாள நடிகரான சுராஜ் வெஞ்சாரமூடு நடித்து வருகிறார்.
மேலும், நடிகை வித்யா பாலன் இந்தப் படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாம் பாகத்தின் கதைக்களம் கேரளாவை மையப்படுத்தியது என்று கூறப்படுகிறது. அதனால்தான் படப்பிடிப்பு பணிகள் கேரளாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் கலந்துக் கொண்ட நெல்சன் ஜெயிலர் 2 குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது “நான் படக்கதையை எழுதியவரை நன்றாக இருக்கிறது. ஜெயிலர் 2 கதையாக நன்றாக இருக்கிறது. படப்பிடிப்பு முடியாமல் நான் எதையும் சொல்ல முடியாது. மக்களுக்கு திரைப்படம் பிடிக்கும் என நம்புகிறேன்” எனக் கூறினார்.










