யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்ட நிகழ்வுகளில் ஊடகவியலாளர்களுக்கு கடும் நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டதுடன், சுதந்திரமாக செய்தி சேகரிக்க புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை.
அந்நிலையில் சமூக ஊடகம் ஒன்றில் பணி புரியும் பெண்ணொருவர் கைத்தொலைபேசி மூலம் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வில் காணொளிகளை எடுக்க அனுமதித்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர், ஊடக அமைச்சின் அடையாள அட்டைகளுடன் சென்ற ஊடகவியலாளர்களை புகைப்படம், காணொளி எடுக்க தடைகளை ஏற்படுத்தி அவர்களுக்கு நெருக்கடியை கொடுத்தமை அங்கிருந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தன.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மயிலிட்டி துறைமுகம், யாழ்ப்பாண மாவட்ட செயலகம், மண்டைதீவு என பல்வேறு இடங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் அடையாள அட்டையை வைத்திருந்த ஊடகவியலாளர்கள் பலரும் இதன்போது செய்தி சேகரிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.
அவ்வாறு மட்டுப்பாட்டுடன் கடும் பாதுகாப்பு சோதனைக்கு மத்தியில் ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு சென்ற ஊடகவியலாளர்களும் சுதந்திரமாக செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை என்பதுடன் ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்திகளை அனுப்பும் அதை வெளியிட்டால் மட்டும் போதுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஜனநாயகம் பற்றியும், ஊடக சுதந்திரம் குறித்தும் அதிகம் பேசி ஆட்சிக்கு வந்தவர்கள் கூட ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் சுதந்திரமாக இயங்க விடாது செயற்பட்டமை ஊடகவியலாளர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.










