மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு முன்னால் பெற்றோர், பாடசாலை நலன் சார்ந்த அமைப்புக்கள் இணைந்து இன்று (01) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
அதிபர், ஆசிரியர்களிடையே பிரச்சினை காரணமாக மாணவர்களின் கல்விச் செயற்பாடு கடந்த சில மாதங்களாக பாதிப்படைந்துள்ளது. இதனை சம்பந்தப்பட்ட கல்வித் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் அவர்கல் இப்பிரச்சினைக்கு குறிப்பிட்ட காலத்தில் தீர்வு வழங்குவதாக வாக்குறுதி அளித்தபோதிலும் அவ்வாக்குறுதி நிறைவேற்றாத நிலையில் இன்று மாணவர்களின் பெற்றோர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் கணித பாடத்திற்கான ஆசிரியரை பதில் ஆசிரியர் இல்லாது இடமாற்றம் செய்துள்ளதால் மாணவர்கள் கணித பாட செயற்பாடுகளில் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாகவும் இங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த இடத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட இணைப்பாளர் திலகநாதன் வருகை தந்து பிரச்சினைகளை ஆராய்ந்ததுடன் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்கு சென்று வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அதிபர், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடி மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படாவண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.














